Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Saturday, November 19, 2011

Sri Ramarajyam

srrmoviereview
இளையராஜாவின் இசையில் பாடல்கள் வெளிவந்தவுடன் ஹாட்கேக் போல விற்று தீர்த்து ஆந்திர பட உலகத்தினரையே ஆச்சர்யப்பட வைத்த படம். நம் தமிழ் பட உலகம் போல் இல்லாமல் காமெடிப்படம், ஆக்‌ஷன் படம், காதல் கதை, என்று வகை தொகையில்லாமல் எல்லா படங்களுமே ஓடும் மார்கெட் உண்டு. அதிலும் பிரபல ஹீரோக்கள் புராண படங்களில் நடிப்பதும், அது மாபெரும் ஹிட்டாவதும் வழக்கமான ஒன்று. சில சமயம் பெரிய ஹீரோக்களின் மார்கெட்டையே மீண்டும் நிலை நிறுத்திய படங்கள் எல்லாம் இம்மாதிரியான புராண படங்கள் தாம் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும். அவ்வரிசையில் அடித்து துவைத்து காயப்போடப்பட்டிருக்கும் பாலகிருஷ்ணாவின் மார்கெட்டை இந்த புராணப் படம் நிலை நிறுத்துமா? பிரபல பழம் பெரும் இயக்குனர் பாப்பு இயக்கி வெளிவந்துள்ள இப்படம் ரசிகரக்ளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

sriramarajyam1 சம்பூர்ண ராமாயணத்தை பாப்பு தன் ஸ்டைலில் கொஞ்சம் லேட்டஸ்ட் வர்ஷனாய் கொடுத்திருக்கிறார்.ராமர் தன் வனவாசம் முடித்து, ராவணனைக் கொன்று மீண்டும் அயோத்திக்கு வந்து பட்டமேற்று ராஜ பரிபாலணம் செய்ய ஆரம்பித்த நேரம், சீதா கர்பமாக இருக்கிறார். சீதா தன் சீமந்தத்திற்கு தாய் வீட்டுக்கு போனால் கணவனை பிரிந்து இருக்க நேரிடுமே என்று அயோத்தியிலேயே தங்கியிருக்கும் வேளையில், நாட்டில் சாதாரண குடிமகனான ஒருவன் ராமன் எப்படி சீதையை ஏற்றான். அதுவும் ஒரு வருடம் வேறொருவன் இடத்தில் இருந்த பெண்ணை ஏற்றது அவமானம் என்று சொன்னதை கேட்டு, தன் நாட்டு மக்களிடம் தன்னை நிருபிக்க, சீதையை காட்டுக்கு அனுப்பிவிடுகிறான். அப்போது தன் மகளின் நிலையை எண்ணி கொதிப்படைந்த பூமாதேவி சீதையை தன்னுடன் வந்துவிடுமாறு கூப்பிட, அதற்கு சீதை, நான் கற்புள்ளவள் என்று ஏற்கனவே தீக்குள் இறங்கி நிருபித்தபின்னும், தன்னை ஒரு கர்பிணி என்று கூட பார்க்காமல் காட்டில் விட்டு வர சொன்னவரின் கட்டளைக்கு பின்னால் ஏதேனும் ராஜ விஷயம் இருக்கும். ஆனால் அவர்கள் வம்சம் தழைக்க நான் நல்ல படியாய் குழந்தைப் பெற்று அவரிடம் ஒப்படைத்த பிறகு உன்னுடன் வருகிறேன் என்று சொல்லி வால்மிகி முனிவரின் குடிலில் தங்கி லவா, குசா ஆகிய இருவரை பெற்றெடுத்து வளர்க்கிறாள். பிள்ளைகளும் வளர்ந்து வால்மிகியின் ராமாயணத்தை பாடி வளர்கிறார்கள். அனுமன் சிறு பையன் போல சீதாவிற்கு துணையாய் இருக்கிறான். தன் தந்தை என்று தெரியாமல் ராமனிடமே ராமாயணத்தை பாடி பாராட்டு பெரும் லவகுசாவிற்கு ஒரு பெரும் அதிர்ச்சி, சீதா பிராட்டியை ராமன் தன் ராஜ்யத்திற்காக காட்டில் தவிக்க விட்டு விட்டான் என்றதும் ராமன் மீதிருந்த மரியாதை போய் விடுகிறது. ஒரு கட்டத்தில் ராமன் அஸ்வமேத யாகம் செய்து அனுப்பிய குதிரையை இவர்கள் கட்டி வைத்து கொண்டு விடமாட்டேன் என்று சொல்ல, தந்தை மகன்களுக்குள் சண்டை எழுகிறது. பின்பு சீதா தேவி வந்து உண்மையை சொல்லி தந்தை மகனை சேர்த்து வைத்துவிட்டு பூமாதேவியுடன் பிரிந்து போய்விடுகிறாள். ராமன் லவா- குசாவுக்கு பட்டம் சூட்டிவிட்டு, தன் பூலோக அவதாரத்தை முடித்து விஷ்ணுவாக அருள் பாலிக்க்க படம் முடிவுகிறது.
sriramarajyam14 இந்தக் கதையை முழுவதுமாய் போட்ட காரணம். எல்லோருக்கும் தெரிந்தகதை என்பதாலும் அப்படி தெரியாமல் இருந்தால் இக்கதையை படித்துவிட்டு படம் பார்த்தால் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்படலாம் என்ற எண்ணத்தில் எழுதிவிட்டேன். ராமன் கேரக்டருக்கு பாலகிருஷ்ணா படு பாந்தம். சில காட்சிகளில் பார்க்கும் போது என்.டி.ராமாராவை பார்த்தது போல் உள்ளது. ஒரு விதத்தில் இதை புராண படமாய் பார்க்காமல் கதையாய் பார்த்தால் ராமன் என்கிற கணவன் தன் மனைவி சீதாவை பிரிந்து படும் அவதிதான் முக்கிய விஷயம். அவர்களுக்குள் இருக்கும் காதல், அன்பு இவைதான் படத்தின் ட்ரைவிங் போர்ஸ் என்று சொல்லலாம். பாலகிருஷ்ணாவின் குரலும், அந்த டயலாக் டிக்‌ஷனும் அட்டகாசம். இன்றைய தலைமுறை நடிகர்கள் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. கொஞ்சம் அடக்கி வாசித்து, தன் காதல் மனைவியை நாட்டிற்காக பிரிந்து வாடும் கணவனை ராமனாய் எண்ணாமல் ஒரு மனிதனாய் புரிந்து கொண்டால் இன்னும் கொஞ்சம் ரிலேட் செய்ய முடியும்.
sriramarajyam23 சீதையாய் நயன் தாரா. மிகச் சரியான செலக்‌ஷன். அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அவரைப் பற்றிய பர்சனல் விஷயங்களே ஞாபகத்துக்கு வரவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுஅருமையான நடிப்பு. வால்மிகியாய் நாகேஸ்வர ராவ். கதையின் முக்கியமான ஒரு கேரக்டர் மிக அநாயசமாய் அடித்து தூள் பரத்தி போகிறார். ஸ்ரீகாந்த், ப்ரம்மானந்தம், கே.ஆர்.விஜயா, ரோஜா என்று ஏகப்பட்ட கேரக்டர்கள். ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரங்களை நன்றாக செய்துள்ளார்கள்.

டெக்னிக்கலாய் சொல்லப் போனால் ராஜுவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்ற ஒரு துல்லியம். அயோத்தி அரண்மை செட்டும், ராமனையும், சீதையும் வரவேற்று பட்டம் சூட்டும் பாடல் காட்சியில் தான் என்ன ஒரு அற்புதமான வண்ணங்கள். அந்த செட்டின் ப்ரம்மாண்டத்தை அருமையாய் திரையில் கொண்டு வந்திருக்கிறார். இவ்வளவு டெக்னாலஜி வளர்ந்து சிஜி படு குழ்ந்தைத்தனமாய் உள்ளது. வால்மிகி முனிவரின் குடில் செட் நன்றாக இருக்கிறது ஆனால் ஆங்காங்கே பறக்கும் குருவிகள், பட்சிகள், பின்னணியில் துள்ளூம் மான்கள், மயில் எல்லாம் சிஜியிலிருக்க, வரைந்த பொம்மையாய் திரைக்கும், தரைக்குமிடையே அந்தரத்தில் நிற்கும் கோரம் படு அமெச்சூர் தனமாய் இருக்கிறது. அந்த காலத்தில் விட்டலாச்சார்யாவே ஆப்டிக்கலில் தூள் பரத்திய வில் மோதல் காட்சிகள் எல்லாம் செம காமெடி. அதே போல மேக்கப் மற்றும் காஸ்ட்யூம்கள். பாலகிருஷ்ணாவின் முகத்தில் இருக்கும் சுருக்கங்களூம், அதற்கு சரியான பேட்ச் செய்யாமல் ஆங்காங்கே அசிங்கமாய் இருக்கிறது என்றால். ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளில் பல பேர் குட்டை ரவிக்கையும், சாதாரண புடவைகளையும் கட்டி வருவதும் அபத்தம்.
 sriramarajyam25 படத்தின் முக்கிய பலமே இளையராஜாதான். என்ன அருமையான பாடல்கள். பாடல்களைப் பற்றி ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருக்கலாம் என்றால் இன்றைக்கு பின்னணியிசைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற கூற்றை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். ராமன் தன் காதல் மனைவி இல்லாமல் பிரிந்து வாடும் துயரையும், காதல் மனைவி அருபமாய் வந்து தான் இல்லாமல் ராமன் எப்படி அஸ்வமேதயாகம் செய்ய முடியும் என்ற யோசித்து வேறு யாரையாவது திருமணம் செய்துவிடுவானோ என்ற அச்சத்தில் அரண்மைக்குள் வந்து தன் சிலையை தானே ரசித்து நின்று விட்டு, தன் கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை, அன்பை, காதலை கண்டு உருகும் காட்சியில் ராஜா.. கடவுளின் கிருபை முழுக்க உள்ளவனய்யா அவன்.. என்னா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கோர் உருக்கி எடுக்கிறார். சில பல பாடல்கள் ஏற்கனவே கேட்ட தொனியில் இருந்தாலும் முழுக்க, முழுக்க, இளையராஜாவின் இசை மழையில், ஆன்மிக, கிளாசிக்கல் இசையில் S.p.bயின் கந்தர்வ குரலில்  நினைய வேண்டுமா.. இதோ. மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.

ஒரு விஷயத்தை பாராட்ட வேண்டும் இன்றைய தலைமுறைக்கு மீண்டும் ராமாயணத்தை சொல்ல விழைந்த தயாரிப்பாளருக்கும் அதை முடிந்த வரை சுவாரஸ்யமாய் கொடுக்க முனைந்த இயக்குனர் பாபுவிற்கும் பாராட்டுக்கள். என்ன முதல் பாதி கதையில் இருக்கும் சுவாரஸ்யம், சீதையை காட்டில் விட்ட மாத்திரத்தில் சுவாரஸ்யத்தையும் விட்டு போய்விட்ட உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை இருந்தாலும் நல்ல முயற்சி.
Sri Ramarajyam – 30/50

No comments:

Post a Comment

Followers

Blog Archive