Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Friday, March 25, 2011

கேபிளின் கதை-7

7
ஜீடிவியின் வருகைக்கு பிறகு, இந்தியாவெங்கும், கேபிள் டிவி நெட்வொர்க் மிக வேகமாய் வளர ஆரம்பித்தது. சின்னச் சின்னதாய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நிறைய சேனல்கள் வர ஆரம்பித்த நேரம்.. ஏ.டி.என், ஏ.டி.என் கோல்ட் என்பது போன்ற பல ஹிந்தி சேனல்கள் மாலை நேரத்தில் மட்டுமே தங்கள் ஒளிப்பரப்பை சில அல்பாயுசு ரஷ்ய ட்ரான்ஸ்பாண்டர்களின் மூலமாய் ஆரம்பித்திருந்தது. அந்த சேனல்கள் எல்லாம் இப்போது இருக்கிறதா இல்லையா என்றே தெரியவில்லை. இப்படி ஆரம்பிக்கப்பட்ட சேனல்கள் பெரும்பாலும் பல மாதங்கள் சோதனை ஓட்டத்திலேயே இருக்கும். நிகழ்ச்சிகள் என்று ஏதுமில்லாமல், வெறும் பாடல்களை ஒளிப்ரப்பிப் கொண்டிருப்பார்கள். அல்லது பழைய இந்தி திரைப்படங்களை ஒளிபரப்பிக் கொண்டிருப்பார்கள். தினமும் இந்தந்த நிகழ்ச்சிகள், இந்த நேரத்தில் என்று இல்லாமல் ஏதோ மூன்று மணி நேரம் நிகழ்ச்சிகளைப் போட்டால் போதும் என்று ஓடிக் கொண்டிருந்த சேனல்களையும், வட மாநிலங்களில் கொடுக்க ஆரம்பிக்க, நம் பக்கம் சேனல் ஆரம்பிக்கும் ஆசை மெல்ல பல பேருக்கு உருவானது.

தமிழ் நாட்டில் கேபிள் நெட்வொர்க்குகள் எங்கெங்கும் பரவி, நிலைப் பெற்றுக் கொண்டிருந்த காலம். மத்திய சென்னை, வட சென்னை ஏரியாக்களில் வட நாட்டவர்கள் நிறைய பேர் வசித்து வந்ததால் ஹிந்தி சேனல்களுக்கு ஆதரவு அமோகமாக இருக்க, லோக்கல் கேபிள் சேனலுடன், ஸ்டார், ப்ரைம் ஸ்போர்ட்ஸ், எம்டிவி, ஜீடிவி என்று கலந்து கட்டு சுமார் ஆறு சேனல்கள் வரை கொடுக்க ஆரம்பித்திருக்க, தமிழ் மக்கள் இருக்கும் ஏரியாக்களில் கொஞ்சம் உயர்குடி வகுப்பினர்கள் இருக்கும் ஏரியாக்களில் மட்டும் ஹிந்தி சேனலாய் இருந்தால் என்ன? அதையும் கொடு என்று காட்டச் சொல்ல.. ஆறு சேனல்களை ஓளிபரப்பி வந்தார்கள்.

தூர்தர்ஷனில் தற்போதைய என்.டி.டிவி புகழ் பிரணாய் ராய் அப்போது டிடியில் பிரபலம். அவர் தொகுத்தளித்துக் கொண்டிருந்த “எ வேர்ல்ட் திஸ் வீக்எனும் நிகழ்ச்சி டிடி1 நேஷனல் சேனலில் பெரும் வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி. உலகில் கடந்த வாரத்தில் நடந்த நிகழ்வுகளை எல்லாவற்றையும், கேப்ஸ்யூலாய், தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான வரவேற்ப்பைப் பார்த்து, இதே போல் நாம் ஏன் ஒரு வீடியோ பத்திரிக்கை ஆரம்பிக்கக்கூடாது என்ற எண்ணம் முரசொலி மாறனின், மகன் கலாநிதி மாறனுக்கு வர, அந்த எண்ணத்தின் விதை தான் “பூமாலைஎன்கிற வீடியோ பத்திரிக்கை.

பூமாலை வீடியோ பத்திரிக்கை 1990களில் இந்திய சாட்டிலைட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆரம்பிக்கும் முன்பே தொடங்கப்பட்டது. வீடியோவும், கேபிள் நெட்வொர்க்கும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டிருந்த நேரம். கிட்டத்தட்ட ஆங்கில வேர்ல்ட் திஸ் வீக் தரத்தோடு, தமிழில் ஒரு நிகழ்ச்சியென்றால் அது பூமாலையாக இருந்த காலத்தில். ஒவ்வொரு ஊராக சென்ஸஸ் கணக்கெடுப்பது போல எத்தனை எத்தனை கேபிள் ஆப்பரேட்டர்கள் இருக்கிறார்கள்? எத்தனை வீடியோ கடைகள் இருக்கின்றது என்றெல்லாம் சர்வே எடுத்து, ஆரம்பிக்கப்பட்டதுதான் பூமாலை. என்ன தான் தரமான நிகழ்ச்சியை வீடியோவாக கொடுத்தாலும், விற்பனை என்பது படு மந்தமாகவே இருந்து வந்தது. ஏனென்றால், முதலில் வீடியோ கடைகளுக்கு சப்ளை செய்யப்பட்ட அம்மாத நிகழ்ச்சிகள் அடுத்த மாதம் பார்க்க பழைய விஷயமாகி விடுவது ஒன்றென்றால். இன்னொரு பக்கம் அந்த ஒரு மாதத்தில் மக்கள் பார்த்தால் தான் உண்டு என்பதால் ஒரு மாஸ்டர் கேசட்டிலிருந்து, பல காப்பிகள் எடுத்து, விற்க ஆரம்பித்தார்கள் வீடியோ கடை அதிபர்கள். மாதாமாதம் ஒவ்வொரு கேபிள் ஆப்பரேட்டரிடம் ஒரு கேசட்டை விற்றுக் கொண்டிருந்தவர்களுக்கு, ஒரு முறை மட்டுமே போட்டு காட்ட இருநூறு ருபாய் வரை செலவு செய்ய யோசிக்க அரம்பித்து, வீடியோ பார்லரிலிருந்து பைரஸி காப்பிகளை வாடகைக்கு வாங்கி ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இதனால் பூமாலையின் விற்பனை மங்கத் தொடங்க.. இரண்டு வருடங்களில் பூமாலை நிகழ்ச்சியின் தரத்தில் வெற்றிப் பெற்றிருந்தாலும், வியாபாரத்தில் ஒரு தோல்வியடைந்த ப்ராஜெக்ட் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தத் தோல்விதான கலாநிதி மாறனுக்கு ஒரு புதிய பாதையை காட்டியது. ஏன் நாம் ஒரு புதிய தமிழ் சாட்டிலைட் சேனலை ஆரம்பிக்கக் கூடாது என்று.

இன்றளவில் ஜீடிவிக்கும், சன் டிவிக்கும் இடையே அக்னி நட்சத்திரம் இருக்கத்தான் செய்கிறது. அது தற்போதைய ஜீ தமிழ் சேனல் வரை. அதற்கு காரணம். சுபாஷ் சந்திராவால், கலாநிதி மாறன் அவமானப்பட்ட கதை ஒன்று உண்டு.. அதை பற்றி அடுத்த எபிசோடில்..

ஆம்.. ஒர் இயற்கை சீரழிவு என் வாழ்க்கையை திருப்பித்தான் போட்டது. அந்த வருடம் சென்னையையே புரட்டிப் போட்டது புயலும் வெள்ளமும். அந்த புயலில் ஸ்டார் போன்ற சேனல்களை ரிசீவ் செய்ய வைக்கப்பட்டிருந்த டிஷ் ஆண்டனா, அப்படியே என் கண் முன், அலேக்காய் பறந்து பக்கத்து காலி கிரவுண்டில் சுக்கல் சுக்கலாய் விழுந்தது. ஆங்காங்கு எங்கள் காலனியில் விழுந்திருந்த மரங்கள் எல்லாம் போட்டிருந்த கேபிள் ஒயர்களையும், ஆம்ப்ளிபையர்களையும் இழுத்து அறுத்து போட்டிருக்க, என்னுடய கேபிள் டிவிக்காகப் போடப்பட்டிருந்த ஒயர்களும் அறுந்து தொங்கிக் கொண்டிருக்க.. மழை நின்ற மூன்றாவது நாள் அசோசியேஷனிலிருந்து வந்து கேட்டார்கள் “ ஏன் படம் வரலை?’ என்று. எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. தெரிந்துதான் கேட்கிறார்களா?இல்லை தெரியாமல் கேட்கிறார்களா?. அறுந்து வீழ்ந்திருந்த ஒயர்களை, மழைத் தண்ணீரில் ஊறிப் போய் ஷார்ட் சர்க்க்யூட் ஆகி எரிந்து போயிருந்த ஆம்ப்ளிப்பையர்களை எல்லாம் எடைக்கு போட வேண்டிய நிலையிலிருக்க, குறைந்த பட்சம் இருபத்தைந்தாயிரம் ரூபாயாவது என் கேபிள் நெட்வொர்க்கை நிலைப்படுத்த தேவையாயிருந்த நேரத்தில், இப்படி கேள்வி கேட்டதும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அடுத்த பேரதிர்ச்சியாக அசோசியேஷன் ஸ்டார் டிவி கனெக்‌ஷனைப் பற்றிய கேள்விகள் வர.. “ என்ன சார் சொல்றீங்க..? ஸ்டார் டிவியா.? அதான் காத்தோட போயிருச்சே சார்..? நீங்க புதுசா எல்லாத்தையும் வாங்கிக் கொடுத்தாத்தான் ரி இன்ஸ்டால் செய்யணும். என் நெட்வொர்க்கை சரி செய்யவே இருபத்தியைந்து ரூபாய்க்கு மேல் தேவை.. உங்களுக்கு நிச்சயம் ஒரு அறுபது ரூபா வேணும் சார்” என்றதும்.. 

“எங்களுக்கில்ல..உங்களுக்குத்தான் வேணும்” என்றார்கள்.

எனக்கேதும் புரியாமல் விழிக்க, “பின்ன நீங்க தானே மெயிண்டெனென்ஸ் காண்ட்ரேக்ட் எடுத்தீங்க?. ஸ்பேர்ஸ் ரீப்ளேஸ்மெண்டுக்காகத்தானே மாசம் முப்பது ரூபா சார்ஜ் பண்ணீங்க? அப்ப என்ன என்ன போச்சோ அதையெல்லாம் நீங்க தான் மாத்தணும்” என்றதை கேட்டு ஆடிப் போனேன்.

“என்னா சார் இது வெறும் முப்பது ரூபா ரெகுலர் மெயிண்டெயினன்ஸுக்குத்தான்.. இந்த மாதிரி எல்லாம் போயிருச்சுன்னா நான் எங்க போவேன். அதும் திரும்ப முப்பது ரூபாத்தான் தருவீங்க? சார் இது நியாமில்லை சார். என்னால் முடியாது என்றதும் அவர் விருட்டென போய் மற்ற எல்லா மெம்பர்களிடம் போய் சொல்லி விட்டு உடனடியாய் மீட்டிங் போட்டு என்னை அழைத்தார்.

ஒரு ப்ளாட்டில் ஹாலில் சுமார் பத்து பேர்கள் சுற்றி உட்கார்ந்திருக்க “ என்னப்பா சூர்யா என்ன செய்யப் போறே..?” என்று டி ப்ளாக் பெரியவர் கேட்க..” என்ன சார் செய்யறது..? நீங்களே சொல்லுங்க.. அக்ரிமெண்டுக்கு வந்து ஒரு மாசம் கூட ஆவலை. அதுக்குள்ள நான் அறுபதாயிரம் செலவு செய்யணுமின்னா நடக்கிற காரியமா? அத்தோட இல்லாம என் நெட்வொர்க்கையும் நான் சரி செய்யணும். நான் ஒன்னும் லாபத்துக்கு உங்க நெட்வொர்க் மெயிண்டெனென்ஸ் எடுக்கலை. நான் வழக்கமா செய்கிற வேலையோட செய்தா கொஞ்சம் காசு வருமேன்னு பார்த்தேன்.. அவ்வளவுதான். நம்மால முடியாது சார்.. எல்லாத்தையும் வாங்கிக் கொடுங்க.. வேணுமின்னா வெறும் மெயிண்டெனென்ஸ் மட்டும் பண்ணித்தர்றேன்.” என்றதும்.. எல்லோரும் ஒருமித்தக் குரலால் “அதெல்லாம் முடியாது சூர்யா.. எதோ புயல் வந்திருச்சு.. அப்படி வராம இருந்திருந்தா நாலு காசு பாத்திருப்ப இல்ல.. எங்களால மாசாமாசம் ஒவ்வொரு ப்ராப்ளத்துக்கும் செலவு செய்ய முடியாதுங்கிறதுனாலத்தானே உன் கிட்ட மாசம் ஒரு அமெளண்ட் கொடுத்து பார்த்துக்க சொல்லிக் கொடுத்தோம். இனிமே எங்களால டிஷுக்கெல்லாம் காசு கலெக்ட் செய்ய முடியாது.. பின் பக்க ஆத்துல வெள்ளம் வந்து சுவர் இடிஞ்சு விழுந்திருச்சு.. அதனால்.. என்ன செய்வியோ எங்களுக்கு தெரியாது. நீதான் பொறுப்பேக்கணும்” என்று அடித்து சொல்லிவிட்டார்கள்.

எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க சார். நான் யோசிச்சி சொல்றேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாலும் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டுதானிருந்தேன். இரண்டு நெட்வொர்க்குகளையும் சரி செய்வதாய் இருந்தால் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் நிச்சயம் வேண்டும். ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து மாசம் முப்பது ரூபாய் வாங்குவதெல்லாம் சுத்தமாய் வேலைக்காகாது. அதற்கு முன்னால் ஒரு லட்சம் ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? ஏற்கனவே ஐம்பதாயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கித்தான் கேபிள் நெட்வொர்க் ஆரம்பித்திருக்கும் நேரததில் அதன் கடன் முடிந்தபாடில்லை. அத்ற்குள் மேலும் ஒரு லட்சம் என்றால் யார் தருவார்கள்? அப்படியே தந்து மீண்டும் நெட்வொர்குகளை ஆரம்பித்தால் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை போல அந்த காலனியிலேயே தொழில் செய்து கொண்டிருந்தால் நிச்சயம் கடனை அடைக்க முடியாது.. இப்படி பல யோசனைகள் என்னுள் ஓட.. ஓட.. என்னுள் தீர்க்கமாக ஒரு முடிவு வந்தது. அடுத்த நாள் அதை செயல்படுத்த அசோசியேஷன் மீட்டிங்கில் அமர்ந்தேன்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive