Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Thursday, March 10, 2011

கேபிளின் கதை-6

6.
முர்டோச்சின் நியூஸ் கார்பரேஷன் ஸ்டார் டிவி, எம்டிவி, ப்ரைம் ஸ்போர்ட்ஸ், பிபிசி, மற்றும் ஸ்டாரின் சைனீஸ் சேனலுடன் தன் சாட்டிலைட் விஸ்தீரணத்தை ஆக்கிரமிக்க ஆரம்பித்த நேரத்தில், கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் தங்கள் நெட்வொர்க்கில் ஆறு முதல் பத்து சேனல் வரை கொடுக்க அரம்பித்திருந்தார்கள். முக்கியமாய் மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற இடங்களில் உயர்குடியிருப்புகளில் கேபிள் டிவியில்லாமல் அவர்களின் அசோசியேஷன் மூலம் மொத்தமாய் பணம் வசூல் செய்து, அவர்களது ப்ளாட்டுகளுக்கு டிஷ் பொருத்தி, அவர்களுக்குள்ளாகவே ஒரு நெட்வொர்க் வைத்து சேனல்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள். அன்றைய காலகட்டத்தில் ஒரு டிஷ் மற்றும் எல்.என்.பி எனும் சாட்டிலைட் சிக்னல்களை டிஷ் மூலமாய் பெற்று அதை ரீசிவருக்கு அனுப்பி வைக்கும் கருவி, ரிசீவர், மற்றும் சேனல்களை வகைப்படுத்த, ஒவ்வொரு அலைவரிசையிலும், ஒவ்வொரு சேனலை வகைப்படுத்தித் தர, மாடுலேட்டர்கள், அந்த சிக்னல்களை பெருக்கி, வீடுகளுக்கு கொடுக்கும் ஆம்ப்ளிபையர்கள், கேபிள்கள், வீடுகளுக்கு சிக்னல்களை பிரித்துக் கொடுக்க ஸ்பிளிட்டர்கள், என்று குறைந்த பட்சம் நூறு வீடுகள் கொண்ட ஒரு வளாகத்திற்கு குறைந்த பட்சம் நான்கைந்து லட்சம் செலவிட வேண்டியிருந்தது.

ஏன் அப்படி அவர்களாகவே செலவு செய்து போட்டுக் கொண்டார்கள் என்றால். அன்றைய கேபிள் டிவி ஆப்பரேட்டர்களில் பெரும்பாலானவர்கள், வேலையில்லாப் பட்டதாரிகளாகவே இருந்ததால், இருந்த பணத்தை வைத்து ஆரம்பித்தாயிற்று, ஆனால் இத்தொழில் வளரும் வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களால் முதலீட்டை போட முடியவில்லை. கொஞ்சம், கொஞ்சமாய் ஒரு தெரு, ரெண்டு தெரு வைத்திருந்த ஆப்பரேட்டர்கள் எல்லாம் முன்னமே இத்தொழிலின் வளர்ச்சியை புரிந்து கொண்டு நான்கைந்து தெருக்களை வைத்திருந்தவர்களிடம் விற்றுவிட்டோ, அல்லது அவர்கள் நெட்வொர்க்கில் ஐந்து சேனல் தருகிறார்களே நீங்கள் ஏன் தரவில்லை? என்று வாடிக்கையாளர்களின் தொடர் டிமாண்டை ஈடுகட்ட முடியாமல் சிறு ஆப்பரேட்டர்கள், ஆட்டத்தை விட்டு விலக ஆரம்பிக்க, அன்றைய பெரிய ப்ளேயர்கள் தங்களது இணைப்புகளை கொடுக்க, முன்பணமாய் அதிகம் வாங்க ஆரம்பித்தார்கள். அவர்களைச் சொல்லித் தப்பில்லை. ஏனென்றால் ஏதோ ஒரு மளிகைக் கடை வைத்தோம் அதற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்தோம். அதை விற்றோம் அதன் லாபத்தை வைத்து மேலும் விரிவாக்கினோம் என்றில்லாமல், பக்கத்து தெருவில் வழக்கமாய் இருக்கும் ஐந்து சேனல் இல்லாமல், புதிதாய் ரஷயன் சேனல் கொடுக்கிறார்கள். புதிய டெக்னாலஜியில் பத்து சேனல்களை ஒருங்கே கொடுக்கும் மாடுலேட்டர்களின் வருகை, புது வகை கேபிள்கள், என்று தொழில் அசுர வளர்ச்சி வளர்ந்துக் கொண்டிருக்க, அதன் போக்கில் தங்களை வளர்த்துக் கொள்ள, இந்த முன்பணம் தான் பெரிய மூலதனமாய் அமைந்தது.

இம்மாதிரியான மூலதனப் பணத்தை ஏன் நாம் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஒரு வீட்டிற்கு 500 ரூபாய் என்றால் 100 வீட்டிற்கு எவ்வளவு? அப்புறம் மாதம் வேறு என்றெல்லாம் கணக்கிட்டு, மொத்தமாய் நாமே போட்டுவிட்டால் நமக்கே நமக்கென ஒரு டிஷ் மற்றும் சேனல்கள் என்று தவறான கணக்கிட்டு, வெகு சில நாட்களிலேயே இவர்களது நெட்வொர்க்கில் மேலும் சில பல லட்சங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்று இத்தொழிலின் வளர்ச்சியைப் பற்றி தெரியாமல் நெட்வொர்க் போட்டு ஒரு ஆறு மாத காலங்களில், மழை, வெய்யில், பனி போன்ற தட்ப வெட்ப மாறுதல்களினால் வரும் பராமரிப்பு பிரச்சனைகளும், அதை சரி செய்வதற்காக மாதத்திற்கு ஒரு சில ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியதை நினைத்து புதிதாய் வரும் சேனல்களை கொடுக்க கண்ட்ரோல் ரூமை மேம்படுத்த வேண்டிய பணத்துக்கு மீண்டும் அசோசியேஷன் வசூலுக்கு நிற்க வேண்டியிருந்த நிலைமையை நினைத்து,, பேசாமல் கேபிள் ஆப்பரேட்டரிடமே சேர்ந்திருக்கலாமோ? என்று யோசிக்க ஆரம்பித்திருந்த நேரத்தில், 1992ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் சாட்டிலைட் ஹிந்தி சேனலான ஜீடிவி உதயமானது.

டி.டி1, டி.டி2 வை மட்டும் பார்த்துக் கொண்டிருந்த இந்திய மக்களுக்கு, ஜீடிவி ஒரு மாபெரும் விருந்தாய் அமைந்தது என்றால் மிகையாகாது. வித விதமான நிகழ்ச்சிகள், தினமும் ஒரு திரைப்படம் என்று நிகழ்ச்சிகளை அள்ளிக் கொடுக்க அரம்பித்ததும், ஜீடிவி இந்தியாவெங்கும் ஒரு புதிய அலையை உருவாக்கி, ஆங்கில சேனல்கள் மட்டுமே வந்துக் கொண்டிருந்த காலத்தில், தங்களது மொழியில் ஒரு சேட்டிலைட் சேனல் வந்தது மக்களுக்கும், இத்தொழிலில் ஈடுபட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கும் ஒரு புதிய உற்சாகததை கொடுக்க..கேபிள் டிவி தொழில் இந்தியாவில் மேலும் ஆழமாய் காலூன்றியது. அதற்கு ஒரு முக்கிய காரணம் சுபாஷ் சந்திரா.

சுபாஷ் சந்திரா
புதிய வியாபாரத்தை கண்டுபிடி. அதற்கான திட்டத்தை வகுத்து வெற்றி பெறுஎன்பதுதான் சுபாஷ் சந்திராவின் தாரக மந்திரம். 1950ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி பிறந்த அவர், தன் பத்தொன்பதாம் வயதில், தன் குடும்பத் தொழிலான அரிசி ஏற்றுமதித் துறையில் நுழைந்தார்., சீக்கிரமே தனக்கென ஒரு புதிய வியாபாரமான காய்கறி எண்ணையில் காலடி எடுத்த வைத்தார். சில ஆண்டுகளிலேயே 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்தவர், மெல்ல பாக்கேஜிங் தொழிலில் ஈடுபட்டு எஸ்ஸெல் ஃப்ரோ பேக் எனும் நிறுவனத்தை நிறுவினார். மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனி மிகக் குறுகிய காலத்தில் உலகிலேயே பெரிய நிறுவனமாய் ஆனது.
எஸ்ஸெல் வேர்ல்ட் எனும் ஆசியாவிலேயே மிகப்பெரிய தீம் மற்றும் அம்யூஸ்மெண்ட் பார்க்கை மும்பையில் நிறுவினார். பின்னர் அதிலேயே வார்ட்டர் தீம் பார்க்கையும் அமைத்து. இந்தியாவில் ஒரு புதிய வியாபாரக் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தார். இவரது அம்யூஸ்மெண்ட் பார்க்கின் மொத்த விஸ்தீரணம் சுமார் 62 ஏக்கராம். உலகத்தரமான அத்துனை வசதிகளையும், ஆசியாவிலேயே சுற்றுச் சூழலுக்கு எந்த விதமான குந்தகமும் விளைவிக்காத ஒரு தீம் பார்க் என்று பெயர் பெற்றது எஸ்ஸெல் வேர்ல்ட்.

இந்திய வான்வெளியில் இந்திய அரசு தனியாருக்கும் இடம் விட, முதல் ஆளாக சுபாஷ் சந்திரா தன் ஜீ டிவியை துவக்கினார். அதன் பிறகு நடந்ததெல்லாம் சரித்திரம். இந்தியாவில் மட்டுமல்ல ஆசியா முழுவதும் சுமார் 500 மில்லியன் பார்வையாளர்களை ஏழே வருடங்களில் தன் வசப்படுத்தியது ஜீடிவி. எங்கு பார்த்தாலும் ஜீடிவியின் நிகழ்ச்சிகளைப் பற்றித்தான் பேச்சாய் இருந்தது. அதன் பிறகு ஆன்லைன் லாட்டரி, சாட்டிலைட்டுகள், தொலைத் தொடர்பு வயர்லெஸ் டெக்னாலஜி, சினிமா, சிட்டி கேபிள் எனும் கேபிள் நெட்வொர்க், மல்ட்டி ப்ளெக்ஸ், மியூசிக் சேனல், இசை வெளியீட்டு கம்பெனி, டிடி.எச் எனும் நேரடி சாட்டிலைட் தொலைக்காட்சியில் தன் தடத்தை டிஷ் டிவியெனும் ப்ராண்டில் இன்றும் பல நிறுவனங்களுடன் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறார். இவரது புதிய முயற்சிகளில் இந்தியன் க்ரிக்கெட் லீக் என்று பி.சி.சி.ஐக்கு போட்டியாய் ஒரு அமைப்பை ஆரம்பித்து அவர்கள் வயிற்றை கலக்கி, உடனடியாய் ஐ.பி.எல் எனும் அமைப்பை ஆரம்பிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தை எற்படுத்தியது ஒரு வெற்றி என்று சொல்லப்பட்டாலும், தொழிலளவில் அவருக்கு ஒரு சரிவுதான். ஆஸ்திரேலியன் சேனல் 9 போல ஆகலாம் என்கிற கனவு இன்றளவிலும் அவருக்கு கனவாகவே இருக்கிறது. சுபாஷ் சந்திராவின் சொத்து மதிப்பு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்கிறார்கள்.
###############################
சைபால்காரர் பிரச்சனை அதற்கப்புறம் வரவேயில்லை.. என் நெட்வொர்க் இருந்த இடம் ஒரு அப்பர் மிடில் க்ளாஸ் இடமாகையால், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று கலந்து கட்டி படங்களை ஒளிபரப்ப.. எல்லாத்தரப்பு ஆட்களும் கொஞ்சம் ஆர்வம் காட்ட ஆரம்பிக்க.. தொழில் கொஞ்சம் கொஞ்சமாய் நிலை பெறத் துவங்கிய நேரம். எங்கள் வளாகத்தின் ஆட்கள் ஒரு கல்லைத்தூக்கிப் போட்டார்கள். டிஷ் போடப்போவதாய். அடிக்கடி மும்பை சென்று வரும் ஒரு ப்ளாட்காரர் அவருடய உறவுக்காரர் மும்பையில் இந்த முறையை அசோசியேஷனில் சொல்லி அவர்களுக்கென்று சொந்தமாய் கண்ட்ரோல் ரூம் போட்டிருக்கிறார் என்று சொல்லி, வெறும் படம் போடுவதற்கு மாதம் ஐம்பதுரூபாய் அநியாயம் என்று சொல்ல ஆரம்பித்து, கொஞ்ச காலத்தில் கேபிள் டிவியில் படம் பார்ப்பதை கொஞ்சம் தரக்குறைவாக நினைத்த சிலர்.. சாட்டிலைட் சேனல்களை பார்க்க ஆவலாக.. அவர்களாகவே டிஷ் போடப்படுவதாய் முடிவெடுத்து பணமும் வசூல் செய்ய ஆரம்பித்தார்கள். ஆஹா.. என்னடா இது வம்பாப் போச்சு என்று உடனடியாய் நான் வளாகத்தின் முக்யஸ்தர்களிடம் போய் “சார்.. இப்படியெல்லாம் முதலீடு போட்டு ஆரம்பிச்சீங்க்ன்னா.. ரெண்டே மாசத்துல.. திரும்பவும் முதலீடு போட வேண்டியிருக்கும். ஆனா எனக்கு இது தொழில்னு ஆகிப் போச்சு.. நான் முதலீடு போடுறேன்”னு சொல்லிப் பார்த்தேன். ”சார்.. நீங்க சொன்னீங்கன்னு இந்த காலனியை விட்டு வெளியா யாருக்கும் இணைப்பு கொடுக்கக்கூடாதுன்னு சொல்லிட்டீங்க. உங்களையே நம்பியிருக்கிறேன். நான் செய்யுறேன்னு திரும்ப திரும்ப சொல்லிப் பார்த்தேன். யாருக்கும் காதுல விழல.

பரபரப்பா மொட்டை மாடியில ஒரு ரூம் கட்டி அதில் கண்ட்ரோல் ரூம் போட்டு, நாலு லட்சம் செலவு செய்து.. ஸ்டார் டிவி கேபிள் என்று தனியாய் ஒரு கேபிள் ஓட்டப்பட்டு பணம் கொடுத்தவர்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது. சில வீடுகளில் என்னுடய கேபிள் சாதா கேபிள் என்றும், இன்னொரு கேபிள் ஸ்டார் டிவி கேபிள் என்றும் அழைக்கப்பட, இரண்டு கேபிள்களையும் மாற்றி, மாற்றி சொருகி பார்க்க கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த மக்களுக்கு இரண்டு கேபிள்களையும் ஒரே இணைப்பில் வைத்து, சுவிட்சுகளை மாற்றுவது மூலம் இரண்டு கேபிள் நிகழ்ச்சிகளையும் சிரமமில்லாமல் பார்க்க உதவும் ஸ்பிலிட்டரை விற்க ஆரம்பித்தேன்.

ஸ்டார் டிவி இணைப்புக்கு அவ்வளவு பெரிய தொகை கொடுக்க முடியாதவர்கள் என்னிடம் வந்து நீங்க ஏன் இன்னொரு டிஷ் போட்டு கொடுக்ககூடாது என்று கேட்டார்கள். என் இயலாமையை சொல்லிப் புரிய வைக்க முயற்சித்தேன். ஆனால் அது அவர்களுக்கு திருப்தியாக இல்லை. புதிய இணைப்புகள் குறைந்தது. ஸ்டார் டிவிக்கு பணம் கட்ட ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் நெட்வொர்க்கில் ப்ரச்சனைகள் வர ஆரம்பித்தது. வீடுகளுக்கு அளிக்கும் சிக்னல்களில் ப்ரச்சனைகளில் ஆரம்பித்து, மூன்று சேனல்களில் யார் கண்ட்ரோல் ரூமிற்கு போய் நிகழ்ச்சியை மாற்றுவது என்பது போன்ற பல தொழில்நுட்ப மற்றும், யார் இந்த வேலையை செய்வது என்ற ப்ரச்சனைகள் தலைத்தூக்க.. அங்குள்ள இளைஞர்கள் கையில் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அதிலும் அடுத்த கட்ட ப்ரச்சனை வர ஆரம்பித்தது. மாலையானால் இருக்கிற மூன்று சேனல்களில் ஒரு ஸ்டார் சேனல் கொடுத்துவிட்டால், மற்ற இரு சேனல்களில் இவர்களுக்கு விருப்பமான ஸ்போர்ட்ஸ், எம்டிவி என்று மாற்றிக் கொடுக்க ஆரம்பிக்க, புதிதாய் வந்திருக்கும் ஜீடிவியை மாற்றச் சொல்லி அசோசியேஷனில் கூச்சல் ஆரம்பிக்க, அதற்கான செலவுக்காக பணம் மீண்டும் வசூல் செய்ய வேண்டும் என்றதும் பலர் அடக் கொடுமையே என்று யோசிக்க ஆரம்பித்த நேரத்தில். அடுத்தடுத்த மாதங்களில் வீடுகளில் வரும் சிக்னல் ப்ரச்சனைகளை அட்டெண்ட் செய்ய ஆட்களில்லாமல் போய்விட, அந்த பொறுப்பை என்னிடம் விட்டார்கள். என்னுடய இணைப்புகளை நான் பராமரிக்கும் போதே அவர்களது இணைப்புகளுக்கான பராமரிப்பு வேலையையும் சேர்த்து பார்க்கச் சொல்ல.. அதற்கு ஒர் இணைப்புக்கு ரூ.30 என்று நிர்ணயித்து, பராமரிப்புக்கு உண்டான மாற்று கேபிள்கள், ஸ்பிலிட்டர்கள், என அத்துனை உபகரணங்களுக்கான செலவுகளையும், அந்த முப்பது ருபாயில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டீஷனுடன் வர.. வேறு யாரையாவது உள்ளே வர விடுவதை விட, லாபமோ நஷ்டமோ.. அதை நாமே பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்து, அந்த ஒப்பந்தத்தை எடுத்த முப்பதே நாளில் ஒரு பெரிய இயற்கை சீரழிவு.. என்னைத் திருப்பிப் போட்டது.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive