Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Saturday, February 12, 2011

தற்கொலைகளும்.. பொதுபுத்தியும்.

சென்ற வாரம் இரண்டு தற்கொலைகள். ஒரு பெண் சக மாணவி வைத்திருந்த பணம் காணாமல் போனதால், சந்தேக லிஸ்டில் இருந்த நான்கு பேரில்  தன்னை மட்டும்  நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்பதற்காக தூக்கு போட்டுக் கொண்டார். இன்னொருவர் பள்ளியில் பரிட்சையில் காப்பி அடித்தற்காக ஆசிரியர் திட்டியதை தாங்க முடியாமல் தூக்கு போட்டுக் கொண்டார். இதற்காக முதல் சம்பவத்தில் நான்கு ஆசிரியர்களை கைது செய்து அப்போதைக்கு பிரச்சனையை முடித்திருக்கிறது போலீஸும், கல்லூரி நிர்வாகமும். கோர்ட்டில் அவர்களை அரெஸ்ட் செய்ததே தவறு என்று கூறி ஜாமீன் கொடுத்துள்ளது.இறந்த பெண் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்றதும், கூட்டமாய் வந்து பிரச்சனை செய்த மக்கள் கூட்டத்தை சமாளிக்க இம்மாதிரியான நடவடிக்கைகள் எடுத்தால் நிச்சயம் எதிர்காலத்தில் நல்ல ஆசிரியர்கள் கிடைக்க மாட்டார்கள். காப்பி அடித்தால் மடியில் வைத்துக் கொஞ்சுவார்களா என்ன? இம்மாதிரியான விஷயங்களை பத்திரிக்கைகளும் ஏதோ உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே பரபரப்புக்காக செய்திகளை போட்டு விடுகிறது. உடனே நம் பதிவர்களும் ஆளாளுக்கொரு பதிவு போட்டுவிடுகிறார்கள். ஜாதிப் பிரச்சனை, அது இது என்று ஆளாளுக்கு ஒர் கற்பனையில். மொத்தத்தில் இவர்களுக்கு தெரிந்த நிஜமெல்லாம் தினசரிகளில் வந்த செய்தி மட்டுமே.. பேப்பரை படித்து மட்டுமே ஆளாளுக்கு பதிவு போடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்பெண் தற்கொலைக்கு முன் அரைகுறையாய்த்தான் கடிதமெழுதி வைத்திருக்கிறார். அதில் எங்கேயும் தன்னை நிர்வாணப்படுத்தி செக் செய்தார்கள் என்று எழுதியிருந்ததாய் இல்லை.

இதில் உச்சம் என்னவென்றால் ஒருவர் எப்படி ஒரு பெண் அவ்வளவு பணத்தை காலேஜுக்கு கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார். என்ன கொடுமைங்க இது?.  அதன் பின்னணியில் இருப்பது யாருக்கும் தெரியாது. எப்படி அந்தப் பெண் திருடியிருக்க வாய்ப்பில்லை, அவள் ஏழை, பிற்படுத்தப்பட்ட பெண் என்ற காரணத்தினால் தான் அவமானப்படுத்தப்பட்டாள் என்று ஒரு வர்ஷன் இருக்கும் போது, ஏன் அந்த பெண் திருடியிருக்கக்கூடாது? தான் மாட்டியதால் அவமானப்பட வேண்டியிருக்குமே என்று தூக்கு மாட்டி செத்திருக்கலாம் என்ற வர்ஷனும் இருக்கத்தானே செய்யும். இதோ இன்று இவர்களை கைது செய்து அவமானப்பட வைதாகிவிட்டது. நாளையே இவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிருபிக்கப்பட்டுவிட்டால், இதே பத்திரிக்கைகளும், பதிவர்களும் அவர்கள் எழுதியதற்கு குறைந்தபட்சமாக வருத்தமாவது தெரிவிப்பார்களா? நிச்சயம் செய்ய மாட்டார்கள் ஏனென்றால் அதற்கான பரபரப்பு போன பிறகு எழுதுவது வேஸ்ட். இப்படி போலியாய் குற்றம் சாட்டப்பட்டு அவமானத்திற்கு உட்பட்டவர்களின் வலி மிகக் கொடியது.

ஒரு பெண் காப்பியடிப்பதை பார்த்து ஆசிரியர் திட்டாமல் என்ன செய்ய வேண்டும்?.  உடனே அவர்கள் அவளை என்ன சொல்லித் திட்டினார்கள் என்பதுதான் முக்கியம் என்று சொல்வது மீண்டும் ஜாதி, மற்றும் பொருளாதார நிலையை வைத்து பேசும் சப்பைக்கட்டுகள் தான். பத்திரிக்கையில் வந்த செய்தியின் படி, நன்றாக படிக்கும் மாணவியான அவர் உடல் நிலை சரியில்லாததால் படிக்கவில்லை. அதை சரி செய்யும் நோக்கில் காப்பி அடித்துள்ளார். ஒரு ஆசிரியை இம்மாதிரியான செயல்களை நன்றாக படிக்காத மாணவி செய்திருந்தால் கூட எக்கேடோ கெட்டு போகிறதென்று விட்டு விடுவார். நன்றாக படிக்கும் மாணவி இப்படி செய்தால் நிச்சயம் கோபப்பட்டு திட்டத்தான் செய்வார். அம்மாணவி தூக்கு போட்டு செத்துப் போனதால் அவள் செய்தது நியாயம் என்றாகிவிடுமா?

ஒருவர் தவறு செய்தால் அவர்களுக்கு ஜாதி, இன, பண வேறுபாடு இல்லாமல் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் பல விஷயங்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இயக்கும் மாப் சைக்காலஜியில் கும்பல் சேரும் கூட்டத்தை சரி செய்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள், அந்த ஆசிரியர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் பாதிக்கும் தெரியுமா?

போன வாரம் இன்னொரு செய்தி ஒரு அரசு ஆஸ்பத்திரியில் தங்கள் குழந்தைக்கு உடல் நிலை சரியிலலை என்று போய் காட்டியிருக்கிறார்கள். அதற்கு டாக்டர்.. குழந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. விரைவில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதை மதிக்காத பெற்றோர்கள் மேலும் ஒரு மாதம் கழித்து குழந்தையின் நிலமை மோசமான போது கொண்டு வந்து ஆபரேஷன் செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். டாக்டர் இப்போது நிலை மோசமாக உள்ளது இப்போது ஆபரேஷன் செய்தால் சான்ஸ் ரொம்ப குறைவு என்று சொல்லிவிட்டுத்தான் ஆபரேஷன செய்திருக்கிறார். ஆபரேஷன் தோல்வியடைந்து குழந்தை இறந்துவிட்டது. உடனே ஒரு கூட்டத்தை கூட்டிக் கொண்டு வந்து டாக்டரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு கும்பல் ஆஸ்பிட்டலை முற்றுகையிட்டு ப்ரச்சனை செய்திருக்கிறதது.

சைக்கிள்காரனுக்கு குறுக்கே நடந்து அடிபட்டால், தவறு நடந்து வந்தவன் செய்திருந்தாலும் சைக்கிள்காரந்தான் தப்பு செய்தான், என்று முடிவு செய்வது போல யாரோ எவரோ எங்கோ ஒருவர் செய்யும் தவறான செயல்களை பொதுபுத்திக் கொண்டு உணர்ச்சிவசப்படாமல் பார்க்க பழகினால் பல பிரச்சனைகளுக்கான காரணம் தெரியும்.

டிஸ்கி: இதோ இன்றும் ஒரு தற்கொலை. சுவாமிமலையில். ஆனால் இதைப் பற்றி ஏதும் பதிவுகளோ, அல்லது பத்திரிக்கைகளில் பெரிய பரபரப்போ இல்லை. இங்கேயும் திருட்டுப் பிரச்சனைதான். என்ன இறந்து போன பெண் வெளிநாட்டில் வேலை செய்யுமொரு குடும்பத்திலுள்ள பெண். ஒரு வேளை அதனால்தான் யாரும் எதுவும் எழுதலையோ.. இல்லை சரி விடுங்கப்பா..

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive