Pages

slokez Apple, slokez Google, slokez Microsoft, slokez Bing, slokez alexa

Thursday, December 9, 2010

சினிமா வியாபாரம்-2

பகுதி-3
பழைய தியேட்டரை புதுசாக்கி, பளபளவென மாற்றியாகிவிட்டது. புது படம் போட்டால் தானே ஒரு கவுரதையாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அந்த தியேட்டரே.. செகண்ட் ரிலீஸ் செண்டர் என்று பெயர் பெற்று, கடைசியாய் பிட்டு படம் போடும் நிலைக்கு வந்திருக்கும் போது நாங்கள் பொறுப்பெடுத்துள்ளதால், அதை எப்படியாவது அந்த இழிப் பெயரிலிருந்து வெளி கொணர்ந்தே ஆக வேண்டும் என்ற சூளுரையை எங்களுக்குள் இட்டுத்தான் தியேட்டரை எடுக்கும் ஆட்டத்தில் இறங்கினோம்.

அது மட்டுமில்லாமல், பக்கத்தில் இருந்த காசி, உதயம், போன்ற தியேட்டர்களுக்கு போட்டியாக ஒரு செண்டரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் எங்கள் மனதில் ஆழ இருந்ததால் புதுப் படம் தான் போட்டாக வேண்டும் என்று ஒரு பெரிய படத்துக்கு முயற்சி செய்தோம். ஆனால் ரிசல்ட் பூஜ்யம்தான். எங்களின் ஆலோசகர், காட்பாதர் தான் எங்கள் தியேட்டரின் கன்பர்மேஷன் செய்யும் பணியில் அமர்த்தியிருந்தோம்.

ஒரு தியேட்டரை திறம்பட நிர்வகிக்க, முக்கிய ஆட்களில் இந்த கன்பர்மேஷன் செய்யும் ஆளும் ஒருவர். அவர் தான் நம் தியேட்டருக்கும், விநியோகஸ்தர்களுக்குமான பாலம்.

அதென்ன கன்பர்மேஷன்? அது வேறொன்றுமில்லை இந்த வாரம் முதல் இத்தனை நாட்களுக்கு இந்த தியேட்டரில் படத்தை வெளியிடும் என்று ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துபவர். இவர் எதற்கு தியேட்டர் மேனேஜர் போதாதா? என்று கேட்பவர்களுக்கு போதாது என்பது தான் என் பதில். ஒரு தியேட்டர் மேனேஜருக்கு தியேட்டரில் இருக்கும் பஞ்சாயத்துகளே பெரிதாக இருக்கும். அதிலும் புதியதாய் பொறுப்பேற்றிருக்கும் தியேட்டரில் பிரச்சனைகள் நிறைய.

ஆனால் தியேட்டர் கன்பர்மேஷன் செய்பவர்களுக்கு அதுதான் தொழில். தினமும் சென்னை, செங்கல்பட்டு சினிமா மார்க்கெட்டான மீரான் சாகிப் தெருவுக்கு போய், விநியோகஸ்தர்களிடம் கலந்து, யார், யார் எந்த எந்த படங்களை வாங்குகிறார்கள். அவர்களுடய நெட்வொர்க் தியேட்டர்கள் எது? எது? அந்த படம் பெரிய படமாய் இருக்கும் பட்சத்தில் எந்த முறையில் அக்ரிமெண்ட் போட்டால் நம் தியேட்டருக்கு கிடைக்கும்?. (அக்ரிமெண்ட் போடும் முறைகளை பற்றி தெரிய வேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் சினிமா வியாபாரம் புத்தகத்தை படிக்க வேண்டும்.. விளம்பரம்) எப்படி பேசினால் அவர்கள் நெட்வொர்க் தியேட்டருக்கு பதிலாய் நம் தியேட்டரில் படம் போட ஏற்பாடு செய்ய முடியும்? எந்த முறையில் விநியோகஸ்தர் ஷேர் கொடுப்பது.. கிராஸிலா? அல்லது நெட்டிலா? என்பதை போன்ற பல விஷயங்களை யோசித்து முடிவெடுப்பது இவர்களது வேலை. இதற்காக இவருக்கு தியேட்டர் உரிமையாளர்கள் படத்திற்கு எவ்வளவு ரூபாய்க்கு அட்வான்ஸ், எம்.ஜி, ஹயர், ப்ளெயின் என்று அக்ரிமெண்ட் போடுகிறார்களோ..அத்தனை ரூபாய்க்கு ஒரு சதவிகிதம் தியேட்டர் உரிமையாளர்களிடமும், இன்னொரு சதவிகிதம் விநியோகஸ்தரிடமும் வாங்கிக் கொள்வார்கள். ஒரு சில பெரிய படங்களை தியேட்டருக்கு புக் செய்து கொடுப்பதில் பெரிய அளவு பணம் புழங்கும் பெரிய பட்ஜெட் படங்களினால் ஆயிரக்கணக்கில் கமிஷன் வாங்கும் தியேட்டர் கன்பர்மேஷன் ஆட்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மாச சம்பளத்திற்கு வேலை பார்க்கும் கன்பர்மேஷன் ஆட்களும் இருக்கிறார்கள். ஒரு சில கன்பர்மேஷன் ஆட்கள் இரண்டு, மூன்று தியேட்டர்களுக்கு கன்பர்மேஷன் செய்வதும் உண்டு.

நம்ம தியேட்டர் கன்பர்மேஷனாக வாத்தியாரை பிக்ஸ் செய்து, மார்கெட்டுக்கு அனுப்பி புது படங்களுக்கான வியாபாரத்தை பேச சொல்லி அனுப்பியதும் போன சில மணி நேரங்களிலேயே போன் செய்து உடனே மீரான் சாகிப் தெருவுக்கு வாங்க.. உங்களை வச்சிட்டு தான் சில விஷயம் பேசணும் என்று என் நண்பரை அழைத்தார். நானும் அவரும் உடனடியாய் கிளம்பினோம். தமிழ்நாட்டின் முக்கிய சினிமா மார்கெட்டான மீரான் சாகிப் தெருவுக்கு. பேர் தான் பெத்த பேரே தவிர மிக குறுகலான ஒரு சந்தில் நெருங்க, நெருங்க கட்டப்பட்ட மினிஸ்கேல் அலுவலகங்கள் அடங்கிய தெருதான் மீரான் சாகிப் தெரு. சென்னை நகரின் முக்கிய இடமான மவுண்ட் ரோடு என்றழைக்கப்படும் அண்ணா சாலையில் காசினோ தியேட்டர் பக்கத்தில் இருக்கிறது. இந்த தக்குணூட்டு தெருவில் தான் தமிழ் சினிமாவின் முக்கிய வியாபாரங்கள் நடைபெறுகிறாதா? என்று யோசித்தால் ஆச்சர்யமாக இருக்கும்.

ஒரு காலத்தில் முழு தெருவுமே சினிமா விநியோகஸ்தர்களாய் இருந்த இடம் தற்போது முன்னும் பின்னும் சின்ன சின்ன லாட்ஜுகள். எலக்ட்ரானிக் கடைகளும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் பெரும்பாலான முக்கிய விநியோக கம்பெனிய அனைவரும் ஒரு சின்ன அறையாவது வாடகைக்கு எடுத்து இன்னமும் ஆபீஸ் நடத்திக் கொண்டுதானிருக்கிறார்கள்.

ஒரு பெரிய படத்தை செங்கல்பட்டு மாவட்ட உரிமை வாங்கியிருந்த ஒரு விநியோகஸ்தர் அலுவலகத்திற்குத் தான் வாத்தியார் வரச் சொல்லியிருந்தார். வாசலிலேயே காத்திருந்தார். என்ன வாத்தியார் என்ன அர்ஜெண்டா வர சொன்னீங்க..? ஏதாவது அட்வான்ஸ் தரணுமா? என்று ஆவலுடன் நண்பர் கேட்க, “அட.. நீங்க வேற.. நான் எவ்வளவோ பேசிப் பார்த்துட்டேன். உதயம் போடுறதுனால நிச்சயம் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. நானும் எம்.ஜி வேணுமின்னாலும் தர்றேன்னு சொல்லி பார்த்துட்டேன். இல்லே.. நாங்க எல்லா படங்களையும் அந்த தியேட்ட்ர்ல தான் போடுவோம். மாத்த விரும்பல.ன்னு சொல்றாங்க.. நான் தான் உங்களை கூப்பிடுறேன். ஒரு முறை பேசிப் பாருங்க.. தியேட்டரை நிறுத்தணுமின்னு ரொம்ப ஆர்வமா இருக்காங்கன்னு வர வழைச்சேன்.. எதுக்கு நீங்க கொஞ்சம் கெத்தா பேசி கன்வின்ஸ் பண்ணி பாருங்க. நிச்சயம் இந்த படத்தை போட்டா ஓப்பனிங் நிச்சயம். படமும் நிக்கும். நம்ம தியேட்டரும் நிக்கும்” என்றார். அவர் பேச்சில் நிஜமாகவே ஏதாவது செய்து முதல் படமாய் அந்த படத்தையே போட்டு விட முடியாதா? என்று ஒரு ஆதங்கம் இருக்கத்தான் செய்தது.

நான்,என் நண்பர், வாத்தியார் மூவரும் ஆபீஸுனுள் போய் உட்கார்ந்தோம். ஆரவாரமாய் வரவேற்று.. காபி, டீ யெல்லாம் கொடுத்துவிட்டு.. இல்லீங்க நாங்க சிட்டி பார்டர்ல இருக்கிற தியேட்டர்ல போடுறதில்ல. இல்லாட்டி கூட கொடுத்திருப்போம். உதயமிருக்குதில்ல அதான். என்றார். பெரிய விநியோகஸ்தர்.. சென்னை செங்கல்பட்டு ஏரியவில் பெரிய படங்களையெல்லாம் வாங்கி வெளியிடுபவர். ரெகுலராக படங்களை விநியோகம் செய்பவர். இவரிடம் ஒரு நல்ல தொடர்பு கிடைத்தால் நிச்சயம் தொடர்ந்து வெற்றிப் படங்களாய் போட்டு தியேட்டரை நிறுத்திவிட முடியும்.

”சார்.. வேணுமின்னா கிராஸுல ஷேர் போட்டுக்குவோம்.. எம்.ஜி. கூட சொல்லுங்க பார்த்து பண்ணிக்கலாம்” என்று தயங்கி, சொன்னேன்.

அவர் உறுதியாய் மறுத்துவிட்டார். நிச்சயம் பார்டர் தியேட்டரில் நாங்க படம் போட மாட்டோம். கடைசி ஒரு வருஷமா பிட்டு படம் வேற போட்டு தியேட்டர் பேரு கெட்டு போச்சு.. அந்த தியேட்டர்ல படம் ரிலீஸ் பண்ணா ஹீரொ, தயாரிப்பாளர் ஒரு மாதிரி பார்ப்பாங்க.. பேரு கெட்டுருங்க.. வேற ஏதாவது படம் போட்டு ஓட்டுங்க. கொஞ்சம் இமேஜ் மாறட்டும் பாத்து அடுத்த படம் பண்ணலாம்.. சினிமா எங்க போயிர போவுது.. என்று நிர்தாட்சண்யமாய் சொல்லிவிட வேறு வழியில்லாமல் கை குலுக்கி வந்துவிட்டோம். என்ன செய்வது தியேட்டர் திறக்கும் நாள் வேறு குறித்தாகிவிட்டது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு நண்பர் வந்து சொன்ன விஷயம் சந்தோஷம் கொடுத்தது.
கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

Followers

Blog Archive